பிரபல நகைச்சுவை நடிகர் ‘போண்டா’ மணி (60), உடல்நலக்குறைவால் நேற்றிரவு சென்னையில் காலமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி வின்னர், மருதமலை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் வடிவேலுடன் இவர் செய்த நகைச்சுவைகள் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது . அதிலும் குறிப்பாக, ‘அடிச்சும் கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க’, ‘தக்காளிச் சட்னிய மூஞ்சில கொட்டி வச்சு இருக்கீங்க’, ‘நீங்க சீப்பா போட்ட பிளான சீப்பாலயே முடிச்சேன் பாத்தீங்களா’ என நடிகர் வடிவேலுவுடன் அவர் பேசிய வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
இந்நிலையில் நடிகர் ‘போண்டா’ மணிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று கடந்த ஒரு வருடமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று திடீரென மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்துள்ளார்.
நடிகர் ‘போண்டா’ மணியின் உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.