ஊதிய உயர்வு கோரி திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் 2 ஆம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3 லட்சம் விசைத்தறிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளார்களிடமிருந்து பாவு மற்றும் நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்யும் இவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின் கூலி உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 2020 ஆம் ஆண்டிலிருந்து கூலி உயர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்லடம் ரகத்திற்கு 20%- மும், சோமனூர் ரகத்திற்கு 23%- மும் கூலி உயர்த்தப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட கூலி தற்போதுவரை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த விசைத்தறி உரிமையாளர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரூ. 120 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.