சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய கருவான பிரக்யான் ரோவர் அதன் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதென்றும் நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தலத்தில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான்-3 என்ற விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
கிட்டத்தட்ட 40 நாள் பயணத்திற்கு பிறகு நிலவின் தென் துருவத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி மகத்தான சாதனை படைத்தது . இதையடுத்து விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்து சென்ற பிரக்யான் ரோவர் நிலவில் தனது ஆய்வு பணிகளை தொடங்கியது .
நிலவில் பிரக்யான் ரோவர் நடத்திய ஆய்வில் நிலவின் மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம், இரும்பு, கால்சியம், குரோமீயம், மெக்னிசியம் ,சிலிகான்,டைட்டானியம் உள்ளிட்ட பல தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்து விக்ரம் லேண்டர் மூலமாக இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பியது . இதுமட்டுமல்லாமல் அங்கு ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்துள்ள பிரக்யான் ஹைட்ரஜன் இருப்பதையும் தேடி வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது .
இந்நிலையில் நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி உறங்க வைக்கப்பட்டதாக இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
நிலவின் அடுத்த சூரிய உதயத்தில் (செப் 22) ரோவர் விழித்து எழுந்து பணிகளை தொடரும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது . பிரக்யான் ரோவர் மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .