மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக இளைஞர் அணி நிர்வாகி பிரவேஷ் சுக்லா (pravesh shukla) தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியாக இருக்கும் பிரவேஷ் சுக்லா (pravesh shukla) என்ற நபர் மதுபோதையில், சிகரெட் பிடித்தப்படியே மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த காணொலி கடும் கண்டனங்களுடன் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், இந்த சம்பவம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் அடிப்படையில், காவல்துறையினர் பரவேஷ் சுக்லாவை கைது செய்து, தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே, நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
“நாய்கள் கூட இதைச் செய்யாது. இந்த நோயுற்ற பிரவேஷ் சுக்லா பாஜக மத்தியப்பிரதேச எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் நெருங்கிய உதவியாளர் என்கிறார்கள். இந்த மனிதாபிமானமற்றவர் உடனடியாகவும் தீர்க்கமாகவும் தண்டிக்கப்படுவாரா அல்லது விஷயம் மூடிமறைக்கப்படுமா?” எனக் கூறியுள்ளார்.