பாஜக சார்பில் மதுரையில் மோடி பொங்கல் என்ற பெயரில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க கடந்தாண்டு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க தமிழகம் வருகிறார். அப்போது அவர் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோரும் விழாவில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இது குறித்து பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழர் திருநாளன பொங்கல் பண்டிகை மதுரையில் வரும் ஜனவரி 12 ம் தேதி, தமிழக பாஜக சார்பில் மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும் இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவுக்காக பாஜக சார்பில், மாநில அளவில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.