கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் சுற்றியுள்ள கட்டடங்களை கட்ட எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறப்படவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஈஷா மையத்தில் 109 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் யோகா மையம் அமைக்கப்பட்டு ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,2017ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும்,வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈஷா மையம் அமைக்கப்பட்டுள்ளதாக, வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் ஆதி கேசவலு அமர்வில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதியோகி சிலை சிலை மற்றும் சுற்றியுள்ள கட்டடங்களை கட்ட எந்த முன் அனுமதியும், தடையில்லா சான்றோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
இதையடுத்து, ஈஷா அறக்கட்டளை தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கட்டிடம் கட்ட அனுமதி பெறவில்லை என தெரியவந்தால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.