EPS Angry : போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
20.12.2023-ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கப் பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களான PMK, TMC, HMS, DMDK, மனித உரிமைகள் கழகம், புதிய நீதிக் கட்சி, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச் சங்கம், CITU தலைமையிலான 7 சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டுக் குழு முதலியவை இணைந்து, தமிழக அரசுக்கும், போக்குவரத்துக் கழகத்திற்கும் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது.
தொழிலாளர் நலத் துறை சார்பில் கடந்த 27.12.2023 அன்று முதல் கட்ட சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இரண்டாவது கட்டமாக 6.1.2024 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி இரண்டு நாட்களில் நல்ல பதில் சொல்வதாகக் கூறிய போக்குவரத்துத் துறை அமைச்சர், இதுவரை தொழிலாளர்களுக்கு நன்மை தரும் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
அதன் பின்பு, 8.1.2024 அன்று தொழிலாளர் நலத் துறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், 9.1.2024 முதல் வேலை நிறுத்தம் துவங்கிய நிலையில், 10.1.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றம், பொங்கல் திருநாளை முன்னிட்டு வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2,000/- வழங்க அரசுக்கு அறிவுரை வழங்கியதோடு, ஜனவரி மாதம் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
ஆனால்,இந்த விடியா திமுக அரசு இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்க மறுத்துவிட்டது.உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றும், பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அவரவர் குடும்பத்தினருடன் அவர்களது சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு வசதியாக, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரிய எனது அறிவுரையை ஏற்று, அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று, பயணிகள் பொங்கலுக்கு அவரவர் ஊர்களுக்குச் செல்ல, இரவு பகலாக பணியாற்றினார்கள்.
பொங்கலுக்குப் பிறகு, தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் முன்பாக நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிற்சங்கத்துடன் ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த அரசு குழு அமைத்தது. ஆனால், அந்தக் குழு இன்றுவரை கூடவில்லை. இறுதியாக, 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை வழங்கியது.
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க 6.2.2024 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உடனே இந்த விடியா தி.மு.க. அரசு போக்குவரத்து வருவாய்த் துறை சார்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் புதிதாக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. இதனால், ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 27.2.2024 அன்று பல்லவன் இல்லம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைத் துவங்க வேண்டும், இல்லையென்றால் தொழிலாளர்களுக்கு உடனடியாக ரூ. 5,000/- இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிய வருகின்றன.
அதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று (6.3.2024) நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலன் என்று வேஷம் போடும் இந்த விடியா திமுக அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று
இடைக்கால நிவாரணமாக ரூ. 5,000/- வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையினை முழுமையாக வழங்க வேண்டும் (eps angry) என்றும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.