சாத்தான்குளத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு பூரான் பிரியாணி (Puran Biryani) வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், சாத்தான்குளம் மெயின் ரோட்டில் “யாக்கோபு பிரியாணி ஸ்டால்” என்ற உணவகம் இயங்கி வருகிறது.
இந்த உணவகத்திற்கு சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த அன்பு என்ற நபர் சாப்பிடுவதற்கு சென்றுள்ளார். அப்போது, உணவகத்தில் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகியவற்றை ஆர்டர் செய்த பிறகு பசி ருசி அறியாது என்பதற்கு ஏற்றார்போல் செல்போனைப் பார்த்துக் கொண்டே அவர் சாப்பிட்டுள்ளார்.
பிரியாணியை முழுவதுமாக சாப்பிட்டு முடித்த பிறகு, இலையின் ஓரத்தில் எடுத்து வைத்திருந்த எலும்புடன் ஒட்டி இருந்த மிச்ச மீதி சிக்கனை எடுத்து சாப்பிட்டார் அன்பு.
அப்போது, அவரது இலையில் பிரியாணியுடன் வேகவைக்கப்பட்ட பூரான் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். ஒரு பருக்கை விடாமல் ருசித்து சாப்பிட்டு விட்டோம் என்ற பீதியில் அதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார்.
இந்நிலையில், கடைக்காரரை அழைத்து பிரியாணியில் பூரான் கிடந்ததை கூறிய நிலையில், அந்த தட்டில் இருந்த கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டி சென்றார் அந்த ஊழியர்.
இதனை அடுத்து அன்புவிடம் நீங்கள் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் வேண்டாம் என்றும் கடை உரிமையாளர் கூறியிருக்கிறார். ஆனால், அன்பு தான் சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கொடுத்துவிட்டு, இனி இதுபோன்று கவனக்குறைவாக பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு வழங்காதீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், பூரான் பிரியாணி (Puran Biryani) விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த உணவகத்தின் உரிமையாளர் யாக்கோபு முழு பிரியாணியையும் சாப்பிட்ட பிறகு இலையில் எப்படி பூரான் வந்தது என்று தெரியவில்லை என்றும், தரமான பொருட்களை கொண்டுதான் அஜினமோட்டோ சேர்க்காமல் நாங்கள் பிரியாணியை தயார் செய்கிறோம் என்றும், யாரோ வேண்டுமென்றே இதுபோல தொழில் விரோதிகள் செய்த செயல்தான் இது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.