நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதிக்கு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல.கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பார்கள் என தரக்குறைவாக பேசியிருந்தார் . ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் .
இந்நிலையில் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல.கணேசன் அவர்களும் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழகம் – நாகா மக்களுக்கு இடையிலான இணக்கத்தை கெடுத்து விட கூடாது. நாகாக்கள் அனைவரும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என ஆர்எஸ் பாரதி கூறியது ஏற்புடையது அல்ல.
உணவு பழக்கத்தை வைத்து நாகா மக்களை அவமரியாதை செய்யக்கூடாது. தமிழர்கள் ஏராளமானோர் நாகாலாந்தில் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். நாகா மக்களும் தமிழகத்தில் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி நாகாலாந்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார் என்பது உண்மைக்கு புறம்பானது. அவர் மீது நாகா மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை புறக்கணிக்க வேண்டும். அவரது செயல் தமிழக மக்களின் உண்மையான குரலை பிரதிபலிக்கவில்லை . ஆர்எஸ் பாரதி பேச்சை நாகா மக்கள் கண்டு கொள்ள வேண்டாம் என இல.கணேசன் விடுத்துள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .