Radhika vs Vijaya Prabhakaran..
ஒரு பக்கம் ராதிகா.. மறுபக்கம் விஜய பிரபாகரன்..
மூன்றாவது முறையாக களத்தில் இருக்கும் காங்கிரஸ்.!.
இதில், கலக்கப் போவது யார்? கவிழப் போவது யார்..?
விறுவிறுக்கும் விருதுநகர் தொகுதியின் அரசியல் ஜாதகம்
எந்தக் கட்சியும் நேரடியாக போட்டியிடாமல் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்துள்ள ஒரு சில மக்களவை தொகுதிகளில் விருதுநகர் தொகுதியும் ஒன்று. ஆனால், ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன் என இரண்டு சினிமா பிரபலங்கள் இங்கு மோதுவதால், “அக் மார்க் ஸ்டார் தொகுதி” என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது விருதுநகர் மக்களவை தொகுதி.
ஆரம்பத்தில், சிவகாசி மக்களவை தொகுதியாக இருந்து பின்னர் தொகுதி மறு சீரமைப்பின் போது விருதுநகர் மக்களவை தொகுதியாக திருநாமம் சூட்டிக்கொண்ட இந்த தொகுதியை பார்த்தாலே, “என்ன..? ரொம்ப பயம்ம்மா இருக்கா?” என்பது போல திமுக இங்கு நேரடியாக போட்டியிட்டதும் இல்லை, வெற்றி பெற்றதும் இல்லை.
இதையும் படிங்க : திருச்சி நிருபர்களை தெறிக்க விட்ட வைகோ! – ஸ்டாலின் பரப்புரை!!
ஆனால், 1967 இல் சுதந்திரா கட்சி துவங்கி கடந்த 2021 வரை காங்கிரஸ், சி.பி.ஐ., அதிமுக, வைகோவின் மதிமுக என சகல கட்சியினரையும் டெல்லிக்கு அனுப்பி இருக்கிறது விருதுநகர் மக்களவை தொகுதி.
காமராஜர் – எம்.ஜி.ஆர்
1977ஆம் ஆண்டு முதன் முறையாக எம்.ஜி.ஆரை ஜெயிக்க வைத்து கோட்டைக்கு அனுப்பிய அருப்புக்கோட்டையும், அதற்கு முன்னர் 1957 மற்றும் 62 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல்களில் கர்ம வீர்ர் காமராஜருக்கு வெற்றி மாலை சூடிய சாத்தூர் தொகுதியும் இதே விருதுநகர் மக்களவை தொகுதியில்தான் உள்ளன.
காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரும் இதில்தான் உள்ளது என்பது அனைவருமே அறிந்த விசயம்தான்.
“காமராஜரின் காலம் மட்டுமே பொற்காலம், மற்ற அனைத்தும் கற்காலம் தான்” என்ற புலம்பல் சத்தத்திற்கு நடுவில்தான், காங்கிரஸ் மேலிடத்தில் அடம் பிடித்து தொகுதியில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார் சிட்டிங் எம்.பி.யான மாணிக்கம் தாகூர்.
அப்படி அவர் போட்டியிடும் பட்சத்தில், விருதுநகர் மக்களவை தொகுதியில் அவருக்கு இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைகள், சாரி..வேதனைகள்
ஆனாலும், அவர் செய்த சாதனைகளை விட தொகுதி மக்களின் வேதனைகள் தான் இங்கு அதிகம். “தொகுதிக்குள் எம்.பி. ஆபீஸ் திறந்தது, சில இடங்களில் பஸ் ஸ்டாப் அமைத்தது தவிர சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் எதுவுமே செய்யவில்லை மாணிக்கம் தாகூர்.
கடந்த முறை விருதுநகர் – மானாமதுரை அகல ரயில்பாதை அமைக்க பாராளுமன்றத்தில் குரல்கொடுத்த அவரால், சிவகாசியின் பட்டாசு சாவுகளையும் தடுக்க முடியவில்லை, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலை சைனாவைப் போல பாதுகாப்பாக நடத்தும் வழிகளையும் மத்திய அரசிடம் பேசி கொண்டு வரவும் முடியவில்லை” என்பது தொகுதியின் பொதுவான புலம்பல்கள்.
புலம் பெயரும் தொழிலாளர்கள்
தொகுதி முழுக்க தொழிலாளர்களும் தொழில் முனைவோர்களும் அதிகமாக இருக்கும் நிலையில், பாரம்பரியமான பட்டாசுத் தொழில், பலருக்கும் வேலை வாய்ப்பளித்த அச்சுத்தொழில்,
பேனா நிப் தயாரிப்பு மட்டுமல்லாமல் நெசவுத்தொழிலும் கூட அந்த தொழிலாளர்களப் போலவே கந்தல் பாயில் நசிந்து கிடக்கிறது இதனால், வெளி மாவட்டங்களுக்கும், மா நிலங்களுக்கும் பிழைப்புக்காக புலம் பெயர்வோர் எண்ணிக்கை விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிகம்.
குற்ற உணர்ச்சி நஹி ஹே..!
இதே போன்ற நெருக்கடியான நிலை கடந்த 2019 தேர்தலிலும் இருந்த போதுதான், ஆலங்குளம் சிமென்ட் ஆலையானது மத்திய அரசு நிதி உதவியுடன் ரூபாய் 550 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் பணம்தான் வந்து சேர்ந்த பாடில்லை.
சிறு, குறு வியாபாரிகள் முதல் விவசாயிகள் வரை ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப் பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் இங்கு அதிகம்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட பசுமை பட்டாசு தொழில் நுட்பத்தை கொண்டு வர முடியாததால், கொத்துக் கொத்தாக உயிரிழப்போர் மாநிலத்திலேயே இங்குதான் அதிகம். ஆனாலும், எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இன்றி பந்தாவாக வலம் வருகின்றனர் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும்.
மெஜாரிட்டி சமூகம்
விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலுமே மெஜாரிட்டியாக உள்ள சமூகம் என்றால் நாடாரும், தேவேந்திர குல வேளாளர்களும், நாயக்கர்களும் தான். அடுத்தபடியாக முக்குலத்தோர், முத்தரையர், சாம்பவார் சமூக மக்களும் பெருமளவில் வசிகிறார்கள்.
இந்த ஜாதிரீதியிலான மெஜாரிட்டியை கூட்டைக் கழித்துப் பார்த்துதான் இந்த மக்களவை தேர்தலில் களமிறக்கப் பட்டிருக்கிறார்கள் 2 ஸ்டார் வேட்பாளர்கள்.
ராதிகா சரத் குமார் Radhika vs Vijaya Prabhakaran :
பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவி தவிர வேறு அரசியல் டைட்டிலோ அல்லது அனுபவமோ இல்லையென்றாலும், சினிமா மூலமும் தொலைக்காட்சி சீரியல்களின் மூலமும் இவர் நுழையாத வீடே இல்லை எனலாம்.
அந்த அளவுக்கு பிரபலமான இவர்தான் சமக என்ற கட்சியானது பாஜகவுடன் ஒன்றர கலந்த பிறகு முதன் முறையாக இங்கு போட்டி இடுகிறார்.
இப்படி, “கன்னி வேட்பாளராக களமிறங்கி இருக்கும் ராதிகா சரத்குமார் விருதுநகரை தேர்ந்தெடுத்த்தற்கு முக்கியமான காரணமே ஜாதிதான்” எனக் கூறப்படுகிறது.
கணவர் சரத்குமாரின் நாடார் சமூக வாக்குகளும், தான் சார்ந்துள்ள நாயக்கர் சமூக வாக்குகளும் துடுப்பு போடாமலேயே தன்னை கரை சேர்த்து விடும் என்பது பாஜக வேட்பாளரான ராதிகா சரத்குமாரின் அரசியல் கணக்கு.
விஜய பிரபாகரன்
கிட்டத்தட்ட இதே போன்ற நம்பிக்கையில்தான் தனது மூத்த மகனான விஜய பிரபாகரனை களம் இறக்கி இருக்கிறார் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த்.
தான் சார்ந்த நாயக்கர் சமூக வாக்குகள் + தனது கணவரின் அப்பழுக்கற்ற இமேஜ் + அவர் மரணத்தால் உண்டான அனுதாபம் போன்றவையும், இது தவிர அதிமுகவின் சாலிடான வாக்கு வங்கியும் காற்றே இல்லாமல் விஜயபிரபாகரனின் அரசியல் பாராசூட்டை உச்சத்திற்கு கொண்டு சென்று விடும் என்பது பிரேமலதாவின் கணக்கு.
ஆனால், “மக்களின் கணக்கு எப்படி இருக்கும்?” என்பது கள ஆய்வில் இருக்கும் நமது I TAMIL NEWS சிறப்புக் குழுவின் இறுதி அறிகையில் மட்டுமே தெளிவாகத் தெரியும்..!
இதையும் படிங்க : “ஃபேமிலி படம்” – பூஜையுடன் இனிதே துவங்கியது படப்பிடிப்பு!!