பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது நிலவியிருக்கும் இந்த சூழலுக்கு நுபுர் சர்மா காரணம் இல்லை என கூறியுள்ளார்.
இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்கின்ற இறைத்தூதர் முஹம்மது நபி குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குறிய வகையில் பேசியது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்தது. நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது ஒடுக்குமுறைகளை அம்மாநில யோகி அரசு ஏவியது. புல்டோசர்கள் கொண்டு போராட்டக்காரர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார்; உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான் என நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
மேலும் கருத்து தெரிவித்த நீதிபதிகள்; நீங்கள் ஒருவருக்கு எதிராக புகார் அளித்தால், அந்த நபர் உடனே கைது செய்யப்படுகிறார்; ஆனால் உங்களை யாரும் தொட துணிவதில்லை, அது உங்களுடைய செல்வாக்கை காட்டுகிறது என விமர்சித்த நீதிபதிகள், டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும். நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி போலீஸ் என்ன செய்கிறது. அவர் நடந்து கொண்ட விதம் , அதன் பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்ககேடானது.
நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை வாபஸ் பெற்றது என்பது காலம்தாழ்த்திய செயல்.நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். அவரால்தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. நுபுர் சர்மா போன்றவர்கள் ஒருவித செயல்திட்டத்துக்காகவே பேசுகின்றனர். இப்படி பேசுவதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.
நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? இதுஜனநாயக நாடுதான்.. இங்கே பேச்சுரிமையும் இருக்கு.. புல் வளர்வதற்கும் உரிமை இருக்கு.. அதே புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது.
தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆகையால் அனைத்து வழக்குகளையும் டெல்லி மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுகிறது. மேலும் எந்தவொரு பரிகாரத்தையும் தேட ஐகோர்ட்டை அணுக வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளா வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி;
நாட்டில் உள்ள தற்போதைய சூழலுக்கு காரணம் நுபுர் ஷர்மா அல்ல. இதற்கு காரணம் பிரதமர் தான். இதற்கு காரணம் உள்துறை அமைச்சர். அதற்கு காரணம் பாஜக-வும், ஆர்.எஸ்.எஸ்-ம் இது தேச நலனுக்கு எதிரானது’ என என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.