பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து பொறுப்பான பதில்களை அளிக்க பிரதமர் மோடி மறுப்பதாகவும், எரிபொருள் விலை உயர்வு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளவற்றிற்கு மாநில அரசுகளே காரணம் என பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதைய கொரோனா பரவல் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்துக் கொண்டனர்.
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று, பெட்ரோல்- டீசல் விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் மோடி;
குடிமக்களின் சுமையை குறைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.
மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். சில மாநிலங்கள் வரிகளை குறைத்துள்ளன. ஆனால் சில மாநிலங்கள் குறைக்காததால் மக்களுக்கு எந்த பலனையும் தரவில்லை.இதனால் இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இது ஒரு வகையில் மாநில மக்களுக்கு செய்யும் அநீதிதான். இது அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நான் யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. விவாதிக்கிறேன். வரிகளைக் குறைக்கும் மாநிலங்கள் வருவாயில் இழப்பை சந்திப்பது இயற்கையானது. ஆனால் பல மாநிலங்கள் அந்த சாதகமான நடவடிக்கையை எடுத்துள்ளன.
கர்நாடக மாநிலம் வரிகளை குறைக்காமல் இருந்திருந்தால், கடந்த ஆறு மாதங்களில் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்திருக்கும். குஜராத்தும் ரூ.3500- 4000 கோடி அதிகமாக வசூலித்திருக்கும் என அவர் கூறினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி;
”எரிபொருள் விலையேற்றம் – மாநில அரசுகளே காரணம்
நிலக்கரி பற்றாக்குறை -மாநில அரசுகளே காரணம்
ஆக்சிஜன் பற்றாக்குறை – மாநில அரசுகளே காரணம்
மொத்த எரிபொருள் வரிகளில் 68% வரியை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது. எனினும் பொறுப்பான பதில்களை கூற மறுக்கிறார் பிரதமர் மோடி. அவரது கூட்டாட்சி முறை அனைவருக்கும் சமமானதாக இல்லை; அனைவரையும் வற்புறுத்துகிறது.” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
High Fuel prices – blame states
Coal shortage – blame states
Oxygen shortage – blame states68% of all fuel taxes are taken by the centre. Yet, the PM abdicates responsibility.
Modi’s Federalism is not cooperative. It’s coercive.
— Rahul Gandhi (@RahulGandhi) April 28, 2022