குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் ஜிக்னேஷ் மேவானியை அவரது பாலன்பூர் சர்க்யூட் ஹவுசில் வைத்து அசாம் போலீசார் கைது செய்து அகமதாபாத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் இன்று காலை அசாம் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மீது அசாம் மாநிலம் கோக்ரஜாரை சேர்ந்த பாஜக தலைவர் அருப் குமார் தேவ் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கோக்ரஜார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துபே பிரதீக் விஜய் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘குஜராத் மாநிலம் வடகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை நேற்றிரவு அசாம் போலீசார் பாலன்பூர் சர்க்யூட் ஹவுசில் கைது செய்தனர்’ என்று தெரிவித்தார்.
ஜிக்னேஷ் மேவானி மீது முதல் தகவல் அறிக்கையை அசாம் போலீசார் பதிவு செய்துள்ளனர். குற்றச் சதி, இரு சமூக மக்களிடையே பிரச்னையை தூண்டும் வகையில் செயல்பட்டது, உள்நோக்கத்துடன் அமைதியை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் மேவானி மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டிருப்பது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி,
“மோடி ஜி, நீங்கள் அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் எதிர்ப்பை நசுக்க முயற்சிக்கலாம்.ஆனால் உங்களால் உண்மையைச் சிறைப்படுத்த முடியாது.’’ என பதிவிட்டுள்ளார்.
Modi ji, you can try to crush dissent by abusing the state machinery.
But you can never imprison the truth.#DaroMat #SatyamevaJayate pic.twitter.com/Qw4wVhLclH
— Rahul Gandhi (@RahulGandhi) April 21, 2022