மோடி வகுப்பினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதால் அவரது சிறப்பு அந்தஸ்து பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் ராகுல் காந்தி வெளிநாடு செல்ல சாதாரண பாஸ்போர்ட் வழங்க தடையில்லா சான்றிதழை வழங்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து புதிய பாஸ்போர்ட் மூலம் அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி நேற்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டா க்லாராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
உண்மைக்கு மாறான அரசியல் கதைகளை விளம்பரப்படுத்தும் இந்திய ஊடகங்களில் காட்டப்படுவது உண்மையான இந்திய அல்ல என்று ராகுல் காந்தி அப்போது குறிப்பிட்டார். எனவே ஊடகங்களில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் உண்மை என நினைக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கருவிகளையும் பாஜகவும், ஆர்எஸ்எஸும் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பாஜக மக்களை அச்சுறுத்தி வருகிறது என்றும் அரசு ஏஜென்சிகளை அது தவறாக பயன்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று இருப்பது மன உறுதியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் இந்தியாவில் ஜனநாயகத்தை மீண்டும் கட்டி எழுப்புவது தான் காங்கிரஸின் உண்மையான சவால் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
ஏதோ ஒரு வகையில் அரசியல் ரீதியாக செயல்படுவது மிகவும் கடினமாகிவிட்டது என்பதை தாங்கள் உணர்ந்ததால் தான், இந்தியாவின் தென்கோடியில் இருந்து காஷ்மீரில் ஸ்ரீநகர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை தாம் நடத்தியதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
கலிபோர்னியா உள்ளிட்ட மூன்று அமெரிக்க நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி அங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துறையாடுகிறார்.மேலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.