சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி கடந்த 2 நாட்களாக ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்து 100 லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்த தக்காளி தற்போது மழை காரணமாக ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பால், வரத்து பெருமளவில் குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் பாதிக்கு பாதியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்திருந்த நிலையில், நேற்று 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வரத்து இருந்தது.
இதன் காரணமாக தக்காளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலை மட்டுமல்லாமல், கத்தரிக்காய், வெண்டைக்காய், உள்ளிட்ட காய்கறி விலையும் உயர்வடைந்த நிலையில், தற்போது விலை சற்று குறைவடைந்துள்ளது.