ரஜினிகாந்த் திடீரென நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அம்மருத்துவமனை நிர்வாகம் அவர் உடல்நலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாள பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது வாங்கியபிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தார் ரஜினிகாந்த். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, குடும்பத்துடன் தீபாவளியன்று ரிலீசாகும் அண்ணாத்தே திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார்.
இதனிடையே நேற்று மாலை திடீரென சென்னை காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல்நலன் பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மனைவி லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்த நாளங்களுக்கான திசுக்கள் சிதைவடைவதால் ரஜினிகாந்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இதையடுத்து ரஜினிகாந்தை நேரில் சந்தித்த அவரது உறவினர் ஒய்.ஜி.மகேந்திரன், அவர் நலமுடன் இருப்பதாக கூறினார். இதேபோல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், ரஜினிகாந்த் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை நிர்வாகம், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.