திரிபுராவில் கடந்த 10 நாட்களாக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர் தாக்குதல், மற்றும் முதியவர், பெண்கள் முதல் குழந்தைகள் வரை மீதான மத அடிப்படையிலான தாக்குதல் என கடந்த நாட்களில் மதத்தின் பெயரால் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த அமைப்பினர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
மேலும், முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்தாத திரிபுரா அரசின் செயலற்ற தன்மையை கண்டிக்கும் வகையில் தமிழகம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் தமீம்அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்தும், மத்திய, மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜித், வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா, திருவெறும்பூர் தொகுதி செயலாளர் சாகுல்ஹமீது இமாம்,
மாவட்ட செய்தி தொடர்பாளர் பகுருதீன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.