தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தில் முதல்கட்டமாக வாரத்திற்கு இரு நாட்களாவது உணவில் சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டாக்டர் ராமதாஸ் கூறியதாவது :
தமிழகத்தில் 1,545 தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்; காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
பா.ம.க.வின் யோசனை வரும் 25-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசுக்கு பாராட்டுகள். காலை உணவில் முதல்கட்டமாக வாரத்திற்கு இரு நாட்களாவது சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும்; பின்னர் படிப்படியாக எல்லா நாட்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என தனது ட்விட்டர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.