திமுக கூட்டணியில் இருக்கும் முஸ்லீம் லீக் சார்பாக அக்கட்சியின் முதல் வேட்பாளராக ராமநாதபுரம் மக்களவைவையில் போட்டியிட சிட்டிங் எம்.பி.யான நவாஸ் கனியே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட தகவலால் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள் திமுகவினர்.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதாக கடந்த வாரம் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போதே, ராமநாதபுரத்தில் மீண்டும் போட்டியிடப் போவது நவாஸ்கனிதான் என அடித்துக் கூறினார்கள் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் கூறியது போலவே, திருச்சியில் இன்று (02.03.2024) நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்குப் பின், “ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவார்” என்று அறிவித்தார் அதன் தலைவரான பேராசிரியர் காதர் மொய்தீன். இது அக்கட்சியினரிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், ‘மீண்டும் அவரேதானா..?’ என்ற விரக்தியில் இருக்கிறார்கள் திமுகவினர்.
அதிகாரிகளின் பாஷையில் தண்ணியில்லாக் காடு, அரசியல்வாதிகளின் பார்வையில் வறட்சிப் பிரதேசம் என பலவாறு அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கியத் தொழிலே மீன்பிடி தொழில்தான். முக்கிய பிரச்சனையும் மீனவர்களின் பிரச்சனைதான். கடல்சூழ இருக்கும் இத்தொகுதி மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும்,
இதையும் படிங்க: ஆதீனம் மிரட்டப்பட்ட விவகாரம்.. பின்னணி இதுதானா..?
அடிக்கடி தாக்கப்படுவதும் சர்வதேச பிரச்சினையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக, இலங்கை அரசுடன் அவ்வப்போது பேச்சு வார்த்தைகள் நடந்திருந்தாலும், இதுவரை சரியான தீர்வு எட்டப்படவில்லை. தவிர, அவ்வப்போது மீனவர்கள் தாக்கடும் போதோ அல்லது இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட போதோ எம்.பி. என்ற முறையில் தற்போது இருக்கும் நவாஸ் கனி இதுவரை நேரில் வந்து ஆறுதல் சொன்னதில்லை என்பதால் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் மீனவ சமுதாய மக்கள்.
கடந்த முறை நவாஸ் கனி வாக்குக்கேட்டு வந்தபோது சொன்ன வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது மீன்களை பதப்படுத்த குளிர்பதன கிடங்குகள் அமைப்பேன். தனியார் சிண்டிகேட் இல்லாமல் அரசே இறால் மீன்களை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுப்பேன், கூரியர், கார்கோ என இண்டர்நேசனல் அளவில் தொழில் செய்து வருவதால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்பதுதான்.
ஆனால், அதையும் கூட இவர் நிறைவேற்றவில்லை என்ற விரக்தியில் திமுகவினரே உள்ளனர். தனக்கு வேண்டிய சில பகுதிகளில் மட்டும் பேருந்து நிழற்குடை, வாட்டர் டேங்க், தெரு விளக்கு என அமைத்துக் கொடுத்திருக்கும் இவரால் பலனடைந்த்து அவரைச் சுற்றியிருக்கும் சிலர்தான் எனக் கூறப்படுகிறது. இதெல்லாம் எம்.பி. மீது பொதுவான குறைகளாக இருந்தாலும், ‘மாவட்ட அமைச்சருடன் தொடர்ச்சியாக முட்டல் மோதல் உள்ள நிலையில் மீண்டும் அவரையே நிறுத்தினால் ஜெயிப்பது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்வியை திமுகவினரே கேட்கின்றனர்.
இதையும் படிங்க:BREAKING | கூடங்குளம் அணுமின் நிலையம் நாளை முற்றுகை
இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “கடந்த முறை வாக்குக் கேட்கும் போது சொன்ன வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை மக்களிடம் இருந்தாலும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல் இன்னமும் கூட முடிவுக்கு வராத நிலையில் அமைச்சரின் ஆதரவாளர்களின் முடிவு எப்படி இருக்குமோ என்பதுதான் இப்போதைய கவலை.
தவிர, இதுவரை இங்கு திமுக 3 முறை மட்டுமே நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த முறையாவது ராமநாதபுரம் மக்களவை தொகுதியை திமுகவிற்கு கட்சித்தலைமை ஒதுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், இந்தமுறையும் கூட்டணிக்கட்சிக்கே ஒதுக்கியது ஏமாற்றம்தான்” என்றனர் அவர்கள். ஆக மொத்தத்தில், “மீண்டும் மீண்டுமா..?” என்ற விரக்தியை திமுகவினரிடமே ஏற்படுத்திருக்கிறார் சிட்டிங் எம்.பி.யான நவாஸ் கனி.