தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. இந்த அவல நிலையை மாற்ரி தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க தமிழக அரசும் இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் & வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கன்னட மொழியில் மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அம்மாநகராட்சி அறிவித்திருக்கிறது. கர்நாடக வணிகத்தில் கன்னடமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
கர்நாடகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் 60% பரப்பளவு கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அச்சட்டத்தை முழு அளவில் செயல்படுத்த முடிவு செய்துள்ள பெங்களூர் மாநகராட்சி,‘‘ பெங்களூரு மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1400 கி.மீ தொலைவுக்கு சாலைகளும், உட்புற சாலைகளும் உள்ளன. அவற்றில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் ஆய்வு செய்யப்படும்.
ஒரு மாநிலத்தில், குறிப்பாக மாநிலத்தின் தலைநகரத்தில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. பெங்களூருவுடன் தமிழகத்தையும், சென்னை மாநகரத்தையும் ஒப்பிடும் போது நிலைமை கண்ணீரை வரவழைக்கும் வகையில் தான் உள்ளது.
சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும் தான் என்றில்லை… தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. அக்காட்சியை காண மனம் பொறுக்கவில்லை. இந்த அவல நிலையை மாற்ற வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன்.
கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும்; பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக்கப்பட வேண்டும்; எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தாய்மொழி நாளான கடந்த பிப்ரவரி 21&ஆம் நாளில் சென்னையில் தொடங்கி பிப்ரவரி 28&ஆம் நாள் மதுரை வரை ‘‘தமிழைத் தேடி’’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொண்டேன். அந்த பயணத்தின் போது கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்று வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் அறிவிக்கைகள் வெளியிட்டன. ஆனால், தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழை கட்டாயமாக்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழில் பெயர்ப்பலகைகளை அமைக்காத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தமிழில் பெயர்ப்பலகை எழுதாத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின்னர் 9 மாதங்களாகியும் இதுவரை அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவில்லை.
எனவே, பெங்களூரு மாநகராட்சியைப் போன்று தமிழக அரசும் இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பெயர்ப்பலகைகளில் 50% தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத்தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் நாளுக்கும் இதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.