சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று முன்தினம் (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.
இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அதையடுத்து, படம் வெளியான அன்று ரசிகர்கள் திரையரங்கு முன் பேனர், பட்டாசு, கேக் வெட்டுதல் என திருவிழா போல கொண்டாடினர்.
இந்தியாவைத் தாண்டி கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல ஜெயிலர் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருந்தது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் இதுவரை உலகம் முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தைப் பார்த்து விட்டு பாராட்டியுள்ளதாக நெல்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இன்று ரேபிட்டோ நிறுவனம் அவர்களது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஜெயிலர் படத்தை இலவசமாகத் திரையிட்டுள்ளது. அதாவது, இன்று (12.08.23) சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் சுமார் 500க்கும் அதிகமான ரேபிட்டோ நிறுவன ஆட்டோ ஓட்டுநர்கள் இலவசமாக ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
மேலும், பெங்களூருவிலும் இதே போன்று ரேபிட்டோ நிறுவனதில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இலவசமாகப் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் பாட்ஷா படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்த நிலையில், அப்படத்தில் அவரது ஓப்பனிங் பாடலாக வரும் ‘ஆட்டோக்காரன்…’ பாடல் ஆட்டோக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.