மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட அம்மா உணவகத்தை திட்டமிட்டு முடக்குவதில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கூறியதாவது:
திமுக அரசால் துவக்கி வைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள விதிமுறைகளில் தளர்வுகளை கொண்டு வரவேண்டும். ஏழை எளிய மக்களின் மனுக்களை தள்ளுபடி செய்து கொண்டே சென்றால் திமுக அரசை மக்கள் தள்ளுபடி செய்வார்கள்.
தகுதி உள்ளவர்களை அடையாளம் கண்டு உச்ச வரம்பை நிர்ணயம் செய்யாமல், உச்சவரம்பை நிர்ணயம் செய்துவிட்டு தகுதி உள்ளவர்களை தேடுகின்றனர்.
ஏழை எளிய மக்கள் பசியாற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட அம்மா உணவகத்தை திட்டமிட்டு முடக்குவதில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய ஆர்.பி. உதயக்குமார் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையாக அம்மா உணவகங்களை திமுக அரசு முடக்குவதாக தெரிவித்துள்ளார்.