கடந்த மூன்று நாட்கள் ஆய்வுக்குப் பின்னர் இன்று ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குறித்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், 6.50%-மாகவே தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
மாதம்தோறும் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் நிதிக் கொள்கை குறித்து ஆலோசித்து அதற்கு தகுந்தவாறு ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை வெளியிட்டு வரும் நிலையில், இந்த மாதம் ரெப்போ வட்டி விகிதம் குறித்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
”அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டின் (2023-23க்கான) நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி) 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக பாதகங்களும் சரி சமமாக இருக்கும்.
அடுத்த நிதியாண்டான 2024-25-ன் முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் அக்டோபர்-டிசம்பருக்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 6.0 சதவீதமாகவும், 2024 இல் ஜனவரி-மார்ச் மாதத்திற்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 5.7 சதவீதமாகவும் உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், 2023ஆம் ஆண்டின் அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் உணவு பணவீக்கம் நிலையானதாக இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அறிவிப்பின் படி, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் வங்கிக் கடனில் வீடு வாங்கி வங்கிக்கு கடன் செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் இருக்காது.
தற்போது மாதம்தோறும் வங்கிகளுக்கு செலுத்தி வரும் வீட்டுக் கடன் தொகையில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும், ரியல் எஸ்டேட் துறைக்கு இந்த அறிவிப்பு சாதகமாக இருக்கும் என்றும் தெரிவிப்பட்டுள்ளது.