ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த இந்தத் தீர்ப்பு குறித்து முக்கியத் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்:
தனது ட்விட்டர் பக்கத்தில்,,”சட்ட பிரிவு 370 மற்றும் 35 A தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாராட்டுக்குரியது. இது நாட்டின் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தப் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்பி அசாதுதீன் ஒவைசி:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஒவைசி அதிருப்தி தெரிவித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து அசாதுதீன் ஓவைசி, “இந்த தீர்ப்பால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்…”என்று பதிவிட்டுள்ளார்.
குலாம் நபி ஆசாத்:
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த ரத்துக்கு ஆதரவளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கவலை தெரிவித்தார், இது வருத்தம் அளிப்பதாகவும் துரதிர்ஷ்டவசமானது நிகழ்வு என்று கூறினார்.
எம்பி சஞ்சய் ராவத் :
ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை நீக்கியதை உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ரீதியாக சரிபார்த்தது குறித்து, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, நாங்கள் அதை ஆதரித்தோம். அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது, அந்த முடிவை நானும் வரவேற்கிறேன்.அங்குள்ள மக்களுக்கு அவர்களின் ஆட்சியை தேர்ந்தெடுக்க முழு உரிமை உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா :
“காஷ்மீர் பகுதி முழுவதும் இப்போது மெல்லிசை எதிரொலித்து கலாச்சார சுற்றுலா நடைபெறுகிறது. ஒற்றுமையின் பிணைப்பு வலுவடைந்துள்ளது. பாரதத்துடனான ஒருமைப்பாடு வலுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் எங்கள் அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடாக் பகுதியில் நிரந்த அமைதியை ஏற்படுத்தவும், அப்பகுதி முழுவதும் வளர்ச்சி ஏற்படுத்துவும் உறுதி எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி:
தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழக்கவோ, விட்டுக்கொடுக்கவோ போவதில்லை. கண்ணியம், மரியாதைக்கான எங்களின் போராட்டம் சமரசமின்றித் தொடரும். இது எங்கள் பாதையின் முடிவு இல்லை. இந்தியா என்ற சித்தாந்தத்தின் தோல்வியே இது” என்று கூறியுள்ளார். மேலும் அவர் இணைத்துள்ள வீடியோவில், “நீங்கள் பற்றியிருந்த கரத்தில் காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.