தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த பண்டிகையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகை நவம்பவர் 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளின் மூலம் காற்று மாசுபாடு ஏற்படுவதாக பல தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டும் வருகிறது. இதனால் குற்றுசூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபோல் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பட்டாசுகள் தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் எனவும் அவற்றை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதற்கிடையே பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும், பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்க சங்கம் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்பட்டது, இந்த மனுக்களை விசாரித்து, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்ச நீதிமன்றம், இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என என உச்ச நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தீபாவளி பண்டிகையின்போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.