15 வது ஆசிய கோப்பை போட்டி வரும் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கயிருக்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கனிஸ்தான்,பங்களாதேஷ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அந்தந்த அணிகள் வெளியீட்டுள்ளன. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் பங்கேற்பதின் மூலம் ரோஹித் ஷர்மா புதிய சாதனையை படைக்கவுள்ளார்.
இதுவரை இந்திய அணி சார்பாக அதிக முறை ஆசிய கோப்பை போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை முறியடிக்கவுள்ளார். இதற்கு முன்பு இந்திய பேட்ஸ்மேனும் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதுவரை சச்சின் டெண்டுல்கர் 6 ஆசிய கோப்பை போட்டியில் விளையாடியுள்ளார். தற்போது ரோஹித் ஷர்மாவும் 6 முறை ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி சமன்செய்துள்ளார். தற்போது தொடங்கவிருக்கும் 15-வது ஆசிய கோப்பையில் விளையாடுவதன் மூலம் 7 முறை ஆசிய கோப்பையில் பங்கேற்கும் வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.
இந்திய வீரர்களான தோனி, ஜடேஜா, அசாருதீன் ஆகியோர் தலா 5 முறை ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளனர். விராட் கோலி, ரெய்னா, கும்ப்ளே ஆகியோர் 4 முறை பங்கேற்றுள்ளனர். இதுவரை நடந்த ஆசியகோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக இலங்கை அணியின் முன்னாள் தொடக்க வீரரான சனாத் ஜெயசூர்யா இருந்து வருகிறார். இதுவரை 1220 ரன்கள் அடித்துள்ளார். அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் 33 விக்கெட்களை கைபற்றி லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார்.
இந்த முறை நடைபெரும் ஆசிய கோப்பை போட்டியானது 20 ஓவர் போட்டியாக நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் இலங்கை, ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அணிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் விளையாடக்கூடிய அணி என்பதால், இந்த தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை நடைபெற்ற இறுதி போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.