மதுரையில் உள்ள தனியார் வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் அலட்சியமாக செயல்படுவதாகவும், விதிகளை மீறி கல்விக்கடன் வழங்குவதை தனியார் வங்கிகள் உதாசீனப்படுத்தினால் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் பணிகளை கண்காணிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தலைமையில் வங்கி அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன்,
மதுரை மாவட்டத்தில் இதுவரை 818 மாணவர்கள் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்து உள்ளனர். இதில் 625 மனுக்கள் ஏற்கப்பட்டு, 52.27 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், 164 விண்ணப்பங்கள் பரிசீலனையிலும், 64 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன.
அடுத்த வாரம் கல்விக்கடன் மேளா நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதில் அனைத்து வங்கி கிளைகளும் பங்கேற்று, மாவட்டத்தில் கல்விக்கடன் தேவைப்படும் அனைவருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரி நிகழ்வாக இருக்கும். இதில் சிறப்பாக செயல்படும் வங்கிகளுக்கு கௌரவம் அளிக்கப்படும்.
இன்றைய ஆய்வுக்கூடத்தில் சில தனியார் வங்கிகள் பங்கேற்காமல் இருந்தது குறித்து விசாரிக்கவுள்ளோம். கல்விக்கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளின் பங்களிப்பு குறைவாக உள்ளது.
மதுரையில் தனியார் வங்கிகள் கல்விக்கடன் கேட்கும் மாணவர்களை உதாசீனப்படுத்தினால் பொறுக்க மாட்டோம். அரசின் விதிகளை மீறி ஒரு மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்தால் கூட வங்கியையும், சம்பந்தப்பட்ட அதிகாரியையும் விட மாட்டோம் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.