வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில் மாணவனுக்கு தவறான அசிகிச்சை (wrong treatment) அளித்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி விவசாயி. இவரது மகன் 13 வயதாகும் சூரியபிரகாஷ் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், சூரியபிரகாசுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள நாயணசெருவு பகுதியில் உள்ள கிளினிக்கிற்கு சென்று கோபிநாத் என்பவரிடம் சிகிச்சை எடுத்துள்ளார். ஆனால், உடல் நிலை சரியாகாததால் மீண்டும் கிளினிக்குக்கு சென்றனர். அப்போது கோபிநாத் தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிற்குச் சென்றதும் மாணவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாணவனை பரிசோதித்தபோது மாணவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் மருத்துவமனைக்குச் சென்ற காவல் துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கிளினிக் நடத்தி வந்த கோபிநாத் லேப் டெக்னீஷியனுக்கு படித்து விட்டு, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சையளித்து (wrong treatment) வந்தது தெரிய வந்தது.
அதையடுத்து, காவல் துறையினர் கோபிநாத் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.