Seeman :அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம் என்றும்,போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி,
வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
2017ஆம் ஆண்டு வரை 23000 பேருந்துகள் இயங்கி வந்த அரசுப்போக்குவரத்துத்துறையில், கடந்த 7 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் வரை குறைக்கப்பட்டு,
தற்போது வெறும் 19000 பேருந்துகள் மட்டுமே இயங்கும் அவலநிலை காணப்படுகிறது. அதுமட்டுமின்றி,

இலவசப் பேருந்துகளால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட திமுக அரசு ஆயிரக்கணக்கான தடங்களில் பேருந்துகள் சேவையை நிறுத்தியுள்ளதும் பெருங்கொடுமையாகும்.
மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பினை ஒவ்வொரு ஆண்டும் ஈடுகட்டும் தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் இழப்பினை மட்டும் ஈடுகட்ட மறுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஏன்?
பேருந்துகள் தனியார் மயம், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பது என போக்குவரத்துக் கழகங்களைச் சீர்குலைக்க முயல்வது ஏன்? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?
உலக முதலீட்டாளர்களையெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைத்துவந்து, தனியார் பெருநிறுவனங்கள் மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளதாக பெருமை பேசும் திமுக அரசு,
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட வழங்க மறுப்பது ஏன்? இதுதான் திராவிட மாடல் அரசு ஏற்படுத்திய முன்னேற்றமா?
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்துவிட்டதாகக் கூறும் திராவிடத் திருவாளர்கள்,
போக்குவரத்து ஊழியர்களின் உரிமைகளை மட்டும் மறுப்பது ஏன்? பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தையே குறையின்றி நடத்த திறனற்ற திமுக அரசு,
பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்போட்டு அதன்மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மக்களின் வறுமையைப் போக்கும் என்பது வெற்று விளம்பரமே அன்றி வேறில்லை.
ஆகவே, தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்துவதைக் கைவிட்டு,
பொதுமக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து ஊழியர்களுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
15வது ஊதிய ஒப்பந்தம், நிலுவையிலுள்ள 96 மாதங்களுக்கான அகவிலைப்படி வழங்குதல், பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துதல்,
Also Read : https://x.com/ITamilTVNews/status/1744670162677375239?s=20
கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்க முன்னுரிமை, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புதல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டுதல், இதர அரசுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம்,
மருத்துவக் காப்பீடு, பணப்பலன் வழங்குதல், பேருந்துகளையும், போக்குவரத்து பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிடுதல்,
உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித்தந்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று (Seeman) சீமான் குறிப்பிட்டுள்ளார்.