சுங்க கட்டண உயர்வு முற்றிலும் நியமற்றது என்றும் பொதுமக்கள் மக்கள் மற்றும் மோட்டார் தொழிலில் ஈடுபடுவோர்களின் நலன் கருதி சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 27ல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 முதல் 10 சதவீதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டன. மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் தற்போது ரூபாய் 5 முதல்150 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுங்க கட்டணம் உயர்வு வணிகர்கள், வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
60 கிமீக்கு ஒரே ஒரு சுங்கச்சாவடி ஏற்படுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் 9 சுங்கச் சாவடிகளில் 31.03.2023 ஆம் தேதியுடன் சுங்கக் கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். ஆனால். இவை எதுவும் செயலுக்கு வரவில்லை. ஆனால், கட்டணம் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கிறது.
தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகள் மூட வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், இவற்றை அகற்ற (02.09.2021) அன்று தமிழக அரசின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கான காலம் முடிந்துவிட்ட நெடுஞ்சாலைகளில், சாலைப்பராமரிப்பு என்கிற பெயரில் தொடர்ந்து கட்டண வசூல் செய்வது நியாயமற்ற செயலாகும். நெடுஞ்சாலைத்துறையில் முறைப்படுத்த வேண்டிய பல பணிகள் இருக்கின்றன. அவற்றை செய்யாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்திக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்? வாகனங்களை வாங்கும்போதே அனைத்து வாகனங்களுக்கும் ஆயுள் கால சாலை வரி வசூலிக்கப்படுகிறது. அப்படியிருக்க சுங்கவரி உயர்வே தேவையற்றது.
நாட்டில் நிலவும் கடுமையான பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை என மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சுங்க கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமற்றது. இது மக்களின் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமையாகும். எனவே மக்கள் மற்றும் மோட்டார் தொழிலில் ஈடுபடுவோர்களின் நலன் கருதி சுங்கக் கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.