நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள நந்திகேஷ்வரர், மகாலட்சுமி உள்ளிட்ட உருவங்களுடனான செங்கோலின் முழு வடிவமும் திருவாவடுதுறை ஆதீனம் சொன்னபடி எங்களது நிறுவனத்தால் தயாரித்துக் கொடுக்கப்பட்டது என உம்மிடி பங்காரு செட்டி தெரிவித்துள்ளார்
இந்தியா விடுதலை பெற்றபோது பிரதமர் நேரு மற்றும் மவுண்ட் பேட்டன் பிரபு இடையே அதிகாரப் பரிமாறுதலின் அடையாளமாக கைமாற்றப்பட்ட செல்கோலினை தயாரித்த ‘உம்மிடி பங்காரு செட்டி ‘ நிறுவனத்தார் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளது குறித்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய உம்மிடி சுதாகர் மற்றும் உம்மிடி பாலாஜி ஆகியோர் தாங்கள் தயாரித்த செங்கோல் நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் அழைப்பின்படி தங்களது குடும்பத்தில் 15 நபர்கள் திறப்பு விழாவில் பங்கேற்பதாகவும் தெரிவித்தனர்.
உம்மிடி பாலாஜி பேட்டி:
” உம்மிடி பங்காரு நிறுவனம் சார்பில் 1947 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட செங்கோல் கிட்டதட்ட 5 அடி உயரம் கொண்டது , ஒன்றரை முதல் 2 கிலோ வரை எடை கொண்டது , வெள்ளியில் செய்து தங்கமுலாம் பூசப்பட்டது.. செங்கோலை 10..12 நபர்கள் சேர்ந்து முழுவதும் கைகளால் மட்டும் 1 மாதம் செய்தனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் செங்கோல் மீண்டும் வைக்கப்படுவதன் மூலம் வரலாறு மீண்டும் திரும்புவது எங்களுக்கு பெருமை தருகிறது.. திருவாவடுதுறை ஆதீனம் சொன்னபடி செங்கோலை செய்து கொடுத்தோம்.
மத்திய அரசு சார்பில் எங்கள் குடும்பத்தில் 15 நபர்களை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். செங்கோல் செய்யும்போது உடன் இருந்த எங்களது பெரியப்பாவும் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகிறார்..
உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தின் 5 வது தலைமுறையான எங்களுக்கு அந்த செங்கோல் பற்றி இப்போதுதான் தெரிய வந்தது.
பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டு , பின்னர் அலகாபாத் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோலை மத்திய கலாசாரத்துறை அதிகாரிக்ள 3..4 மாதங்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.
நாங்கள் 1947 ம் ஆண்டில் ஆதீனத்திடம் நாங்கள் தயாரித்த செங்கோலை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தோம்.செங்கோலை டெல்லிக்கு அனுப்பி வைத்தோம்.
செங்கோலில் நந்திகேஷ்வரர் , மகாலட்சுமி உருவங்கள் இருக்குமாறு செய்து தருமாறு திருவாவடுதுறை ஆதீனம் சொல்லியிருந்தார் , அதன்படி நாங்கள் செய்து கொடுத்தோம். செங்கோல் வடிவமைப்பு திருவாவடுதுறை ஆதீனத்தார் சொன்னபடியே செய்து கொடுக்கப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் எங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்தில் கோயில்களுக்கு நிறைய பொருள்களை நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம் , அதனால் ஆதீனம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த பணியை கொடுத்தார்.
அப்போது சௌகார்பேட்டையில் எங்களது நகை தயாரிப்பு கூடம் இருந்தது , பின்னர் தி.நகருக்கு மாற்றிவிட்டோம்.
செங்கோலை செய்து திருவாவடுதுறை ஆதீனத்திடம் நாங்கள் கொடுத்துவிட்டோம் , அதன் பிறகு அந்தச் செங்கோல் மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுக்கப்பட்டதா , இல்லையா என்பது குறித்து எங்களுக்கு தெரியாது என்று கூறினார்.