பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மியா பூர் நகர் ஆல்வின் காலனியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மியாபூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலாமாக இருந்த நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது வரை தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், கடந்த சில நாட்களாக அந்த இல்லத்தில் தான் வசித்து வந்திருக்கிறார் என்று போலீசுக்கு தகவல் சொன்ன நபர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்துகொண்ட நபர் ஞானேந்திரபிரசாத் என்பதும், தெலுங்கானா மாநிலத்தின் பாஜக செயற்குழு உறுப்பினர்களின் ஒருவராக இருந்துள்ளதும் தெரிய வந்திருக்கிறது. செர்லிங்கம் பள்ளி தொகுதியைச் சேர்ந்த அவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலுடன் இருந்துள்ளார். இதை அடுத்து அவர் தற்கொலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது .
கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஞானேந்திர பிரசாத் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது உதவியாளரிடம் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு தூங்க சென்றுள்ளார். ஆனாலும் நீண்ட நேரம் அவர் வெளியே வராததால் ஜன்னல் பகுதியை உடைத்துக் கொண்டு உதவியாளர் உள்ளே சென்று இருக்கிறார்.
அப்போது ஞானேந்திர பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதன்பின்னர்தான் அவர் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவராக ஞானேந்திரபிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநில பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.