ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2ம் தேதி பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் ரயில்களில் பயணித்த ஏராளமானோர் உயிரிழந்தனர் .
விபத்து குறித்து ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த பயங்கர விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த இந்த கோர விபத்தில் உயிரிழந்த , காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு அந்தந்த மாநில அரசுகள் நிவாரண நிதிகளை அறிவித்துள்ளனர்.மேலும் ரயில்வே நிர்வாகம் சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலை இயக்கியவர்களின் நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது . சம்பவத்தின் போது நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மேல் மோதிய கோரமண்டல் விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.