கோவை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் 1 ஓட்டு மட்டும் பெற்று படுதோல்வியடைந்த நிலையில், டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒத்த ஓட்டு பாஜக, single Vote BJP என்ற ஹேஷ்டாக்குகள் பிரபலமாகி வருகிறது.
மேலும் டுவிட்டரில் இந்த ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார்.
மொத்தம் 1551 வாக்குகள் உள்ள இந்த குருடம்பாளையம் ஊராட்சியில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் அருள்ராஜ் முன்னிலை பெற்று வந்தார்.
இறுதியாக 387 வாக்குகள் பெற்ற அருள்ராஜ் வெற்றி பெற்றார். அடுத்ததாக சுயேட்சை வேட்பாளர் ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற அதில் 3 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கு பெற்று படுதோல்வி அடைந்தார். கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவராக இருக்கும், பாஜக வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் அவரை சேர்த்து மொத்தம் 6 வாக்குகள் உள்ளது. ஆனால் அவர் குடும்பத்தினர் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
இந்த செய்தியை கேட்ட பலரும் சமூக வலைதளங்களில் மீம் கிரியேட் செய்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்த செய்தி வந்த சில நிமிடங்களிலேயே தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது. பெரும்பாலானோர் நகைச்சுவையாக மீம் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
மேலும் இந்த செய்தி இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகும் அளவிற்கு ஒத்த ஓட்டு பாஜக, Single Vote BJP என்ற ஹேஷ்டாக்குகள் டுவிட்டர் உட்பட சமூக வலைதளங்களில் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக பாஜக வேட்பாளரின் சொந்த குடும்பத்தில் உள்ள 5 பேரும் அவருக்கு வாக்களிக்காததை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.