எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் இதுவரை 40 மெட்ரிக் டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது . இந்நிலையில் சென்னை எண்ணூர், மணலி பகுதியில் தேங்கிய வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் .
கச்சா என்னை கசிந்துள்ள இப்பகுதிகள் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருவதால் இப்பகுதிகளை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும் என சிபிசிஎல் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது .
இதையடுத்து எண்ணூரில் தற்போது தேங்கி இருக்கும் வெள்ள நீரில் கலந்த எண்ணெய் கசிவை அகற்ற 75 படகுகள் தீவிர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் இதுவரை 40 மெட்ரிக் டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு, தண்ணீரில் கலந்த 36,800 லிட்டர் எண்ணெய் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் எவ்வளவு கசிவு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய சென்னை ஐஐடி பேராசிரியர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.