இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் பல அளப்பறிய சாதனைகளை செய்து வரும் நிலையில் தற்போது உலகின் எந்த நாடும் இதுவரை தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, நிலவிற்கு சந்திராயன்-3 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை அனுப்பி, அதை பத்திரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கி, அந்த லேண்டரில் இருந்து பிரஞ்யான் ரோவரையும் நிலவின் மேற்பரப்பில் இறக்கி தற்போது நிலவில் வெற்றிகரமாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.
இந்த சாதனையின் மூலம் உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத நாடாக முன்னேறியுள்ளது இந்தியா. அதையடுத்து, இஸ்ரோவின் இந்த வெற்றியை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன.
அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்த தயாராகி வருகிறது இஸ்ரோ. அது தான் ஆதித்யா எல்-1 திட்டம். இந்த ஆதித்யா எல்-1 திட்டமானது சூரியனையும், சூரியனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும்.
அதன்படி, இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணித்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் ஒன்றான எல் 1 என்ற சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து சூரியன் குறித்த பல்வேறு விதமான ஆய்வுகள் மற்றும் தகவல்களை பூமியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப உள்ளது.
அதன்படி, ஆதித்யா எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் 2ம் தேதி இந்திய நேரப்படி சரியாக காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய உள்ளது. இந்நிலையில், இந்த அரிய நிகழ்வை நேரடியாக பார்ப்பதற்கு இஸ்ரோ பொது மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள லான்ச் வியூ கேலரியில் இருந்து மக்கள் இந்த நிகழ்வை நேரடியாக கண்டு ரசிக்கலாம் எனவும், இதற்காக கட்டணம் எதுவும் இல்லாமல் பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது இஸ்ரோ.
ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் இதற்கு முன்பதிவு கட்டாயம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
முன்பதிவுகள் இன்று (29.08.23) சரியாக மதியம் 12மணி முதல் தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யும்போது செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி போன்றவற்றை வழங்கினால் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும். மேலும், முதலில் முன்பதிவு செய்யும் மொத்தம் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp இந்த லிங்கில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.