கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரரைத் தாக்கி அவரது முதுகில் PFI என எழுதிவிட்டு மர்மக்கும்பல் தப்பிச்சென்றுவிட்டதாக வெளியான செய்தி, சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் பிரபலமாவதற்கு ஆசைப்பட்டு பரப்பிய கட்டுக்கதை என்று தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (EME) கார்ப்ஸில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர் ஷைன் குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்திருந்த போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த (24.09.23) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு தனது வீட்டிற்கு அருகில் வைத்து தன்னை மர்ம கும்பல் தாக்கி சட்டையைக் கிழித்து முதுகில் ‘PFI’ என்று எழுதிவிட்டு தப்பிச் சென்றதாக இந்திய ராணுவ வீரர் ஷைன் குமார் கடக்கால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ஷைன் குமார் அளித்த புகாரில்..
“நான் கடந்த (24.09.23) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வீட்டின் அருகே சிலர் நிற்பதைப் பார்த்தேன். அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் யாரோ ஒருவர் குடிபோதையில் படுத்துக் கிடப்பதாகவும், அந்த நபரை உங்களுக்குத் தெரியுமா என்றும் கேட்டார்கள். அதன் பின்னர் என்னை தாக்கி என் முதுகில் ‘PFI’ என்று எழுதிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மர்ம நபர்கள் 6 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் கேரளா போலீசார் இறங்கினர்.
ஆனால்,போலிஸாரின் தீவிர விசாரணையில், இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பதை கண்டுபிடித்தனர். மேலும், இந்த நாடகத்தில் குமாருக்கு உதவிய அவரது நண்பர் ஜோஷி தாங்கள் பொய்யான புகாரை அளித்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அதையடுத்து, இந்த சம்பவத்தை நடத்த பயன்படுத்தப்பட்ட பச்சை பெயிண்ட், பிரஷ் ஆகியவற்றை ஜோஷியின் வீட்டில் இருந்து கைப்பற்றிய கடக்கால் போலீசார், குமார், ஜோஷி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
மேலும், PFI கடந்த ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.