பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தினை (PMK) தென்சென்னை தொகுதி சோழிங்கநல்லூரில் ஆரம்பித்தார். அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர் கூறியதாவது :
“என்னுடைய முதல் பிரச்சாரத்தை சகோதரி தமிழிசைக்காக தென் சென்னை தொகுதியில் தொடங்குவதை பெருமையாக கருதுகிறேன். அவர் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தை குமரி அனந்தன் அவர்கள் மதுவிலக்கிற்காக இன்னும் போராளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மருத்துவமனையில் படுத்திருந்த போதும், அன்புமணி பேசுகிறேன் என்று சொன்னதும், அய்யா அந்த மதுவை ஒழியுங்கள் என்று சொன்னதும், என் கண்களில் நீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு போராட்ட உணர்வு கொண்டவர், அந்த உணர்விற்காக தான் மருத்துவர் தமிழிசைக்காக பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன். அவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.
தமிழக மக்களே நல்லவர்களை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள். ஐந்தாண்டுகளுக்கு முன் திமுக கூட்டணியை சேர்ந்த 38 பேர் அனுப்பினீர்களே! அவர்களால் தமிழகத்திற்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டா? ஒருமுறை தவறு செய்து விட்டீர்கள் மீண்டும் அந்த தவறை செய்யாதீர்கள்.
சென்னை என்று சொன்னாலே டிசம்பர் மாதம் நினைவுக்கு வந்துவிடும், டிசம்பர் மாதம் வந்தாலே எப்படா வெள்ளம் வரும் என்ற பயம் வந்துவிடும். மழை என்பது நமக்கு இயற்கை வரம், அப்படியான மழையை பார்த்து, ஆண்ட இரண்டு கட்சிகளும் நமக்கு பயம் வர வைத்து விட்டார்கள் .
1967 இல் திமுக ஆட்சிக்கு வந்த போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருந்தது 12500 ஏக்கர், காஞ்சிபுரம் மாவட்ட மழையை முழுவதுமாக உறிந்து கொள்ளும். தற்போது 2000 ஏக்கர் தான் உள்ளது. 10500 ஏக்கரை அழித்துவிட்டார்கள். திமுக அதிமுகவிற்கு முற்றுப்புள்ளி வையுங்கள், 2026 தேர்தலில் மாற்றம் கொண்டு வர தற்போதைய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரியுங்கள், வாக்களியுங்கள்.
2015 இல் நாம் விரும்பும் சென்னை ஆவணம் தயாரித்து உங்களை வந்து சந்தித்தேன், 10 வருடங்களில் மிகப்பெரிய வெள்ளம் வரும் என்றேன், எட்டே ஆண்டுகளில் வெள்ளம் வந்துவிட்டது. அடுத்த 6 ஆண்டுகளில் மிகப்பெரிய வெள்ளம் வரும், இவர்களை நம்பினால் உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு வரும்.
தமிழிசை வெற்றி பெற்றால் அவர் உறுதியாக கேபினெட் அமைச்சர் ஆவார். இது அமைச்சர் தொகுதி, உங்களுக்கு வேண்டியதை எல்லாம் உறுதியாக கேட்டு உறுதியாக வாங்கித்தருவார். அதிமுக எதனை நம்பி பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் இருக்கிறார்களா? தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கிறார்களா? அவர்கள் இங்கேயும் ஆளுங்கட்சி கிடையாது, அங்கேயும் ஆளுங்கட்சி கிடையாது. அவர்களுக்கு வாக்கை செலுத்தி வீணாக்காதீர்கள், எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு அளியுங்கள்.
திமுகவின் தற்போதைய எம்பிக்கள் வந்தார்களா? இப்போ தேர்தலுக்காக வந்தார்கள். அமைச்சர்கள் வருவார்கள். மற்ற நேரங்களில் எங்கே போனார்கள்? தேர்தல் முடிந்ததும் சென்று விடுவார்கள்.
சென்னை மக்கள் மீது எனக்கு கோபம் தான், சின்னத்திற்காக வாக்களிக்காதீர்கள், கொள்கைக்காக வாக்களியுங்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் எங்கள் மருத்துவர் அய்யாவை விமர்சிக்கிறார். பாஜகவிற்கும் பாமகவிற்கும் கொள்கைகள் வேறு என்கிறார்கள்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராகுல் காந்தி போட்டியிடக்கூடாது என்கிறார்கள், திமுகவிற்கும் காங்கிரசுக்கும் ஒரே கொள்கையா? மம்தா பேனர்ஜிக்கும் காங்கிரசுக்கும் ஒரே கொள்கையா? சிவசேனாவிற்கும் காங்கிரசுக்கும் ஒரே கொள்கையா? இவர்கள் எல்லாம் எப்படி கூட்டணி சேர்கிறார்கள்? இது தேர்தல் கூட்டணி அவ்வளவு தான், ஆனால் பாமகவின் மீது மட்டும் விமர்சனம் வைக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் சமூகநீதி கொள்கைகளை விட்டுக்கொடுக்காது.
2006 இல் டெல்லியில் நடைபெற்ற கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில், ஓபிசி 27% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்த தவறியதை கண்டித்து, கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என சோனியா காந்தியை பார்த்து மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னதும், அதிர்ந்து போனவர், மாலையே மற்றொரு கூட்டத்தை கூட்டி, அடுத்த ஆண்டில் இருந்து கல்வி நிலையங்களில் ஓபிசி 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என அறிவித்தார்கள். இது தான் மருத்துவர் அய்யா. எங்கே சென்றாலும் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
மருத்துவர் அய்யாவிற்கும், பிரதமருக்கும் நெருங்கிய நட்பு உண்டு, மேடையில் பார்த்திருப்பீர்கள், மேடையில் மட்டுமல்ல, நாங்கள் டெல்லியில் சென்று சந்தித்த போதும் சரி, பிரதமர் அய்யாவை சந்திக்கும் போதும் சரி, அய்யா எப்படி இருக்காங்க, உடல்நலனை கவனத்தில் கொள்ளுங்கள் என விசாரித்துக் கொண்டே இருப்பார்.
முதலமைச்சர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பில் பாமகவிற்கும் பாஜகவிற்கும் வெவ்வேறு கொள்கை என சொல்கிறார். காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று சொன்னார்களா? கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி சொல்கிறார், ஏன் சொன்னார்? மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலுக்காக சொன்னார்.
பாஜக இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமாட்டோம் என சொல்லியிருக்கிறார்களா? அவர்கள் அப்படி சொல்லவில்லை. கூட்டணியின் மூத்த தலைவர் மருத்துவர் அய்யாவின் அனுபவம் தேவை என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்திருக்கிறார். அதனால் நிச்சயமாக பக்குவமாக பிரதமரிடம் பேசி மருத்துவர் அய்யாவால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வைக்க முடியும்.
திமுக ஆட்சிக்கு வரும் முன் என்ன என்ன பொய் சொன்னார்கள் என உங்களுக்கு தெரியும். நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள், தள்ளுபடி செய்தார்களா? கல்விக்கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள், தள்ளுபடி செய்தார்களா? விவசாயக்கடனை தள்ளுபடி செய்வோம் என்றார்கள், தள்ளுபடி செய்தார்களா?
ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் நீட்டை ஒழிப்போம் என்றார்கள், ஒழித்தார்களா? மாதம் மாதம் மின் கணக்கை எடுப்போம் என்றார்கள் எடுத்தார்களா? எடுத்தார்களா? மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.
பால் விலை உயர்வு, குடிநீர் விலை உயர்வு என மக்களை ஏமாற்றி ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சருக்கு என நடக்குதுன்னே தெரியாது, ஏனெனில் அவரைச்சுற்றி நாலைந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள், அவர்கள் செய்வது ஆட்சியல்ல வியாபாரம்.
தமிழ்நாட்டில் இரண்டே துறைகள் தான் வளர்ச்சியடைந்துள்ளது. ஒன்று டாஸ்மாக், மற்றொன்று போதைப்பொருள் விற்பனை, தமிழ்நாடு கஞ்சாநாடு எனப்பெயர் மாற்றம் செய்யும் அளவுக்கு நிலமை மோசமடைந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் ஒருபக்கம் என மும்முனை தாக்குதல் நடக்கிறது. இளைய சமுதாயத்தை காப்பாற்றுங்கள் என மூன்றாண்டுகளாக கேட்டுக்கொண்டே இருக்கிறேன், இப்படியே தொடர்ந்தால் தமிழகத்தில் மனிதவளம் இல்லாமல் போகும்.
அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்தில் பேசும்போது, டாஸ்மாக்கை மூடுங்கள் என மக்கள் சொல்ல, 2016 இல் கலைஞர் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று சொன்னோமே ஓட்டு போட்டிங்களா எனக் கேட்கிறார். என்ன கொள்கை இது, மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் கொள்கையை மாற்றிப்பிங்களா?
அய்யா அவர்கள் 40 ஆண்டுகாலமாக ஒரே கொள்கை பிடிப்புடன் மதுவிலக்கில் உறுதியாக இருக்கிறார். சட்டையை மாற்றிக்கொள்வது போல மாற்றிக்கொள்கிறீர்கள்.
தமிழ் தமிழ் ன்னு ஆட்சிக்கு வந்திங்க, தமிழை பாதுகாப்போம் என்று சொன்னிங்க, இந்தியாவிலே தமிழ்நாட்டில் மட்டும் தான் தாய் மொழி தமிழ் படிக்காமலே, பேசாமலே பட்டம் வாங்கலாம் என்ற அவல நிலை இருக்கிறது. எங்கே இருக்கிறது தமிழ், எதில் இருக்கிறது தமிழ்?
Also Read : https://itamiltv.com/pm-modi-takes-a-new-leap-against-the-congress-party/
எடப்பாடி பழனிசாமி எங்களை பார்த்து துரோகம் செய்துவிட்டார் என்கிறார். நாங்கள் என்ன எழுதிக்கொடுத்தா கூட்டணிக்கு வந்தோம்? 2019 இல் நாங்கள் கூட்டணிக்கு வந்ததால் தான் இரண்டு ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்திங்க, இரண்டு ஆண்டுக்காலம் என்ன செய்தீர்கள்? 10 அம்ச கோரிக்கைகளை வைத்தோமே செய்தீர்களா, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினீர்களா?
2021 சட்டமன்ற தேர்தலில் அய்யாவின் 42 வருட உழைப்பு, பல பேருடைய உயிர்த்தியாகம், பல லட்சம் மக்களின் சிறை என எல்லாவற்றையும் தியாகம் செய்து, நீங்கள் சொன்ன நிபந்தனைக்கு நாங்கள் சரி சொன்னதால் தானே இட ஒதுக்கீடு அளித்தீர்கள், அதனை முழுமனதுடன் அளித்தீர்களா? நீங்கள் தானே எங்களுக்கு துரோகம் செய்தீர்கள்.
அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காதீர்கள், நல்லவர்களை தேர்ந்தெடுங்கள், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்!
திமுகவினர் டாஸ்மாக்குக்கு இலக்கு வைக்கிறார்கள், சாராயத்தை வைத்து பிழைப்பு ( PMK ) நடத்துகிறார்கள். வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் தமிழிசை அவர்களை தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! என தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.