தெற்கு மண்டல (South Zone) விமான நிலையங்களில் காலியாக உள்ள ‘சி’ பிரிவு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 119 காலிப்பணியிடங்கள் இந்த ஆள்சேர்க்கையின் மூலம் நிரப்பப்பட உள்ளது என்றும் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜனவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தெரிவித்துள்ளதாவது..
தெற்கு மண்டல (South Zone) இந்திய விமான நிலைய ஆணையத்தின் அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இத்தேர்வில் இள நிலை உதவியாளர் ( தீயணைப்பு பணி ), இளநிலை உதவியாளர் ( அலுவலகம் ),
முதுநிலை உதவியாளர் ( மின்னணுவியல் ) மற்றும் முதுநிலை உதவியாளர் ( கணக்கு ) போன்ற பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு ஜன. 26-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக ( பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், இதர பிரிவினர் ) செலுத்த வேண்டும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.aai.aero என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
பணி விவரம் :
- இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை) – 73 காலிப்பணியிடங்கள்
- இளநிலை உதவியாளர் (நிர்வாகம்) – 02 காலிப்பணியிடங்கள்
- முதுநிலை உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்) – 25 காலிப்பணியிடங்கள்
- இளநிலை உதவியாளர் (கணக்கு) – 19 காலிப்பணியிடங்கள்
சம்பள விவரங்கள் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 36,000 முதல் 1,11,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
இதில், தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
https://x.com/ITamilTVNews/status/1747498208132227437?s=20