அரசுப் பள்ளிக்கு நிலம் வழங்கிய ஆயி அம்மாளுக்கு குடியரசு நாளில் (special award) சிறப்பு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை அருகில் தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானம் கொடுத்த ஆயி என்ற பூரணம் அம்மாளின் செயல் அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
சுமார் 7.5 கோடி விலைபோகும் நிலத்தை தானமாக வழங்கி சத்தமின்றி வங்கியில் வேலைபார்த்து வரும் இவரின் செயலை கண்டு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் என பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயி என்ற பூரணம் அம்மாளின் செயலுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் சிறப்பு விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறிருப்பதாவது :
கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் .
இதனை நன்கு உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள்
ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில்
குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் (special award) சிறப்பு விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் .
இதே போல் தமிழ் நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் ஆயி அம்மாள் அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Also Read : https://itamiltv.com/pongal-2024-is-celebrated-on-jan-15-admk-general-secretary-has-conveyed-his-wishes/
மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும்
அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனி அவர்களின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது
ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் அவர்கள் கௌரவிக்கப்பட உள்ளார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.