தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது – இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.
இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை உரிய காலத்திற்குள் செலுத்தவில்லை எனக்கூறி மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை கழுவுமாறு நிர்பந்தித்திருக்கும் இலங்கை சிறைத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க : மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுத்திடுக – அன்புமணி ராமதாஸ்!
வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்காததன் விளைவே தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்தும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடுமைப் படுத்தியிருக்கும் இலங்கை கடற்படைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலின்றி தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.