2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் சரண் சிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
தாய் நாட்டின் இரும்பு தூண்களான மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர் . பயிற்சிக்காக வரும் இளம் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தாய் நாட்டின் பெருமை காக்க மல்யுத்த களத்தில் போராடி வந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் இன்று சொந்த நாட்டிலேயே நீதி வேண்டி போராடி வருவது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . வீரர்களின் இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்று வரை குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நான் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும் என மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் தெரிவித்த பாஜக எம்.பி.பிரிஜ் பூஷன் சரண் சிங் பொதுமேடையில் கூறிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
நாளுக்கு நாள் தீவிரமடையும் மல்யுத்த வீரர்- வீராங்கனைகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக வரும் 15-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதியளித்திருக்கும் நிலையில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷனின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.