சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் (fishermen) தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கடந்த 13-ந்தேதி முதல் மீன் கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகளும், மீனவ பெண்களும் போராட்டத்தில் இறங்கினர். அப்போது, விற்பனைக்கு வைத்திருந்த மீன், நண்டு ஆகியவற்றை சாலையில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான மீன்பிடி பகுதிகளை மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இச்சூழலில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கக்கன் தீப்சிங் பேடி ஆகியோருடன் மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்ல மீனவர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.