தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற உள்ள நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 03-12-2023 அன்று புயலாக வலுப்பெற கூடும்.
இதையடுத்து டிச.4ம் தேதி மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில், சென்னைக்கும் மசிலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது