பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரியாத ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் அட்ரஸ் கண்டுபிடிப்பது சிரமம் தான்.ஆனால் இன்று தெரியாத நாட்டுக்கு கூட டென்ஷன் இல்லாமல் சென்று இறங்கி ஊர் சுற்றலாம்.
கூகுள் மேப் துணை இருக்கும். அதனை தெளிவாக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பிரச்னையில் சிக்கமாட்டார்கள்.கூகுள் மேப், தனது வரைபட சேவையினை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது.
அந்த வகையில் வந்தது தான் ஸ்ட்ரீட் வியூ அம்சம்.இதன் மூலம் பயனர்கள், பயணிக்கத் திட்டமிடும் பகுதிகளை 360 டிகிரி பார்வையில் ஆராயலாம்.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் 2016ல் இந்த வீதிக் காட்சி தடை செய்யப்பட்டது.
வீதிக்காட்சியில் இருக்கும் பேனோரமிக் புகைப்படத்தில் தனிநபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றதால், இது தனியுரிமை மீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்து தடை விழுந்தது.
6 ஆண்டுகளுக்கு பின் இவ்வசதிக்கு கடந்த ஆண்டு மீண்டும் அனுமதி கிடைத்தது. இந்தியாவில் இந்த ஸ்ட்ரீட் வியூ எனும் வீதி காட்சிகளை முதலில் பெங்களூரில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.
தற்போதைய புகைப்படங்களில் தனிநபர்களின் முகங்கள், அடையாளங்கள் மறைக்கப்பட்டு அவர்களின் பிரைவசி பாதுகாக்கப்படுகிறது.
தற்போது முக்கிய நகரங்கள், கிராமங்களின் ஒவ்வொரு தெருக்களும் 360 டிகிரி கேமராக்கள் மூலம் படமெடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வசதி பெரும்பாலான இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் கிடைக்கிறது.
ஸ்ட்ரீட் வியூ வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் இரண்டிலும் கூகுள் மேப்ஸ் ஆப் மூலமாகவும், கூகுள் மேப்ஸ் இணையதளத்திலும் வேலை செய்யும்.
பயனர்கள் இந்தியாவின் அடையாளச் சின்னங்கள், இயற்கை அதிசயங்கள், அருங்காட்சியகங்கள், அரங்கங்கள், உணவகங்கள், முக்கிய வீதிகள் போன்றவற்றை 360 டிகிரி கோணத்தில் அனுபவிக்க முடியும்.
கூகுள் மேப் ஆப்பை திறந்து அதில் லேயர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்தால் மேப் டீடெய்ல் என்பதில் ஸ்ட்ரீட் வியூ என்று இருக்கும். அதனை தேர்ந்தெடுத்து வீதிக் காட்சிகளை காணலாம்