தடுப்பூசி செலுத்தாமல் போலி சான்றிதழ் வழங்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்துவந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இயல்புக்கு அதிகமாக சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருகிறது. மேலும், தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தும் வகையில் பல மாவட்டங்களில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிலர் தங்கள் ஆதார் எண்களை நண்பர்கள் அல்லது தெரிந்த களப்பணியாளர்களிடம் கொடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டதாக முறைகேடாக சான்றிதழ்களை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட இணை இயக்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் களப்பணியாளர்கள் இதுபோன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், தடுப்பூசி செலுத்திய பிறகே அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ் தரும் பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மேலும், போலியாக சான்றிதழ் பெறுவதற்காக மக்கள் புரோக்கர்கள், ஏஜெண்டுகளை அணுகுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.