நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் விற்பனையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள பொதுமக்கள் அத்யாவசிய தேவைகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர் .
இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்துள்ளதால் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் மட்டும் தனியார் பால் கிடைத்த நிலையில் அதுவம் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் .
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது :
ஆவின் பால் விற்பனையகங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். நிலமை நன்கு சீரடைந்து வருகிறது, வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்.
அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி பகுதிக்கு வழக்கமான விநியோகத்தை விட கூடுதலாக 10,000 லிட்டர் பால் அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் மற்றும் தனியார் பால் விற்பனையில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தனது ட்விட்டர் பதிவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.