மத்திய அரசின் கல்வித் உதவி தொகையை பெறுவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-22ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் ‘மத்திய அரசின் தேசிய கல்வி தொகை’ இணைய தளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் பள்ளி படிப்பு கல்வி உதவித் திட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவம்பர் 30ஆம் தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.