2022 – 2023-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஒரு மாத விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் 1 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7 ஆம் தேதியாக மாற்றப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்
இருப்பினும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாமல் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரித்து வந்ததால் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் சமூக வலைத்தளங்கள் மூலம் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வலுவான கோரிக்கை எழுந்தது . இதனால் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் கருதி தீவிர ஆலோசனைக்கு பின் பள்ளி கல்வித்துறை கோடை விடுமுறையை சில நாட்கள் நீட்டித்தது.
அந்தவகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது .
பள்ளி திறந்த முதல் நாள் அன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயிலும் மாணவ , மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
அதன்படி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை இன்று வழங்க உள்ளார்.
வெயிலின் தாக்கத்தினால் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதால், ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் நேரப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதை அடுத்து மாணவர்களுக்கு பாடச் சுமை ஏற்படாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியிலும் பாதிப்பு ஏற்படாதவாறும் இனி சனிக்கிழமைகளிளும் பாட வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .