Supreme Court to RN Ravi : தமிழக அமைச்சராகப் பொன்முடிக்கு, பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது குறித்து நாளைக்குள் ஆளுநர் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
வருமானத்துக்கு மீறி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி பொன்முடிக்கு 3ஆண்டுகள் சிறைதண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதனால் சிறைத் தண்டனை பெற்ற பொன்முடியின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டு, அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்தது.
இதனால் பொன்முடியின் தகுதி நீக்கம் ரத்தாகி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏவானார். திருக்கோவிலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலும் ரத்தாகியது.
இதையும் படிங்க : ‘திமுக ஒரே பொய்யை எத்தனை முறை சொல்வது..’-கடுப்பான சசிகலா!
இதனைத் தொடர்ந்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.
ஆனால், ஆளுநர் அதற்கு மறுப்பு தெரிவித்தது தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருக்கோவிலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்முடிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பின்னரும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார் Supreme Court to RN Ravi.
நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும் என்றும் கடுமை காட்டியவர், ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாதா என்றும் சரமாரியாக வினாக்களைத் தொடுத்தார்.
இந்த விவகாரத்தில் பதில் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நாளை வரை கெடு; இல்லையென்றால் என்று கூறி நிறுத்தியவர்கள்… நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளார்.
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது தமிழக அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு – பின்னணியில் ஓ.பி.எஸ்சா?